in சிறுபான்மையினர், நச்சுப் பிரச்சாரம், நபர்கள், பா.ஜ.க, பார்ப்பன இந்து மதம், புதிய கலாச்சாரம்,போராட்டங்கள் by வினவு, June 28, 2013
முஸ்லீம்கள் தங்கள் தேசப்பற்றை ‘இரண்டு முறை’ நிரூபிக்க வேண்டும் என்று கருதுவோருக்கு சவுக்கடி கொடுக்கும் முகமாக, பைசாபாத் மாவட்டத்தின் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த சில விடுதலை வீரர்களின் வரலாற்றை சுருக்கித் தருகிறோம்.
(1992-ல் எழுதப்பட்ட கட்டுரை)
மதத்தின் பெயரால் நாட்டைக் குறுக்கு நெடுக்காகப் பிளப்பதற்குத் தனது மதவெறிக் கோடரியைப் பாரதீய ஜனதா இறக்கியிருக்கும் இடம் அயோத்தி. அயோத்தியோ, மதுராவோ, வாரணாசியோ… இடம் எதுவானாலும் நோக்கம் தான் முக்கியம். எனினும் இடத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கத்தானே செய்கிறது!
அன்று வார்சாவின் லெனின் கப்பல் கட்டும் கூடத்தில்தான் போலந்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சியின் முதல் முழக்கத்தை எழுப்பியது. இன்று அமெரிக்காவின் செல்லப்பிள்ளை வாலேசாவைப் பெற்றெடுத்ததும் அதே கப்பல் கட்டும் கூடம்தான்!
புராணக் குப்பைகளிலிருந்து கிளறி எடுத்து ராமனைத் தேசிய நாயகனாக்கியிருக்கிறது பாரதீய ஜனதா. ஆம்! தேசிய நாயகன் – ராமன், தேசிய வில்லன் பாபர்! ராமாயண்த்தின் காலம்? 2000 ஆண்டுகளுக்கு முன்னதா, மூவாயிரமா, ஐயாயிரம், பத்தாயிரமா? புராணப் புனை சுருட்டுகளுக்குக் கால நிர்ணயம் செய்யும் கேலிக் கூத்து தேசிய முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
பிளவின் துவக்கப்புளியாகவும், பொய்களின் பிறப்பிடமாகவும், எந்த அயோத்தி இன்று உலகப் புகழ்பெற்றுவிட்டதோ, அதே அயோத்தி, அதே பைசாபாத் மாவட்டம் ஒற்றுமையின் முதல் குரலாகவும், போர்க்குணத்தின் பிறப்பிடமாகவும் இருந்த காலமும் ஒன்றுண்டு. மிகப் பழங்காலமல்ல நூற்று முப்பதே ஆண்டுகளுக்கு முன்னர்தான்.
இதே பைசாபாத் மாவட்டம் ஓர் உண்மையான தேசிய நாயகியைப் பரிசளித்தது. தேசப் பற்றின் வடிவமாக நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான இளைஞர்களைப் பெற்றுத் தந்தது. ராபர்ட் கிளைவ்களாலும், வெல்லெஸ்லி, டல்ஹவுசிகளாலும் நிரப்பப்பட்ட நமது வரலாற்று நூல்களில் இவர்களுக்கு இடமில்லாமல் போனதில் வியப்பில்லை. ‘சிப்பாய்க் கலகம்’ என்று வெறுப்புடனும், அச்சத்துடனும் வெள்ளையனால் சித்தரிக்கப்பட்ட முதல் சுதந்திரப்போரின் நாயகர்களும் அவர்களது வீர வரலாறும் டில்லி ஆவணக் காப்பகங்களின் புழுதியில் புதைந்து கிடக்கின்றன.
அவத் சமஸ்தானம் என்றழைக்கப்பட்ட இன்றைய அயோத்தியின் அரசியான ஹஸ்ரத் மஹலைப் பற்றி 1959 பிப்வரி 1-ம் தேதி ஸ்டேட்ஸ் மேன் நாளேட்டில் எஸ்.என்.சந்தா என்பவர் ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர் “1857 – உலகிற்குச் சொல்லப்படாத கதைகள்” என்ற தனது நூலில் முதல் சுதந்திரப் போரின் நாயகர்கள் பலரை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரும் நமது வரலாற்றுப் பாடநூல்களில் இந்த வீரப் புதல்வர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
முஸ்லீம்கள் தங்கள் தேசப்பற்றை ‘இரண்டு முறை’ நிரூபிக்க வேண்டும் என்று கருதுவோருக்கு சவுக்கடி கொடுக்கும் முகமாக, பைசாபாத் மாவட்டத்தின் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த சில விடுதலை வீரர்களின் வரலாற்றை மட்டும் அந்நூலிலிருந்து சுருக்கித் தருகிறோம்.
இன்றைய உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோ அன்று அவத் எனும் ராச்சியத்தின் தலைநகரம். அந்த ராச்சியத்தின் 12 பிராந்தியங்களில் ஒன்று தான் பைசாபாத். டெல்லி முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக 1720-ல் அவத் தனி நாடாயிற்று. பெயரளவிற்கு டெல்லி முகலாயப் பேரரசுடன் இணைந்திருந்தது. லக்னோவிற்குப் பதில் பைசாபாத் அதன் தலைநகரமானது.
அன்று வங்காளத்தில் குடியமர்ந்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அவத் மன்னர்களுடன் நெருங்கிய உறவு கொண்டனர். வர்த்தக உறவு என்ற பெயரில் நாடுபிடிக்கும் சதியில் ஈடுபட்ட வெள்ளையர்கள் இங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். மன்னன் வாஜித் அலிகானின் ஆட்சி சீர்குலைந்து போனதால் ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து மன்னனைக் கல்கத்தாவுக்குக் கொண்டு சென்று தமது கண்காணிப்பில் வைத்துக் கொண்டனர். தமது மண்ணும், மரியாதையும் பிடுங்கப்பட்டதால் மக்கள் ஆத்திரம் கொண்டனர்.
இந்தியாவின் வடபகுதியிலும், கிழக்கிலும் உறுதியாகக் காலூன்றிக் கொண்ட பிரிட்டிஷ் காரர்கள் மேற்கிலும் தெற்கிலும் கூடக் கணிசமான இடங்களைப் பிடித்துக் கொண்டனர். மற்ற இடங்கள் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாகச் சிதறிக் கிடந்தன. 1856-ல் இந்திய வரைபடம் இருந்த நிலையை ஒருமுறை பார்த்தால் இது விளங்கும். பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்க அஞ்சி குறுநில மன்னர்கள் பலர் வரிசையாகச் சரண்டைந்தனர். இறுகிய முகத்துடனும் இரக்கமற்ற இதயத்துடனும் புதிதாய் வரிவசூலுக்கு வந்த கலெக்டர்களையும், கமிஷனர்களையும் கண்ட மக்களோ ஆத்திரம் கொண்டனர்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் பெரும்பான்மையாக இருந்த இந்திய – இந்துக்கள், முஸ்லீம்கள் இருவருமே – சிப்பாய்கள் மத்தியிலும் இக்கோபம் பரவியது. அவத் சமஸ்தானத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியுடன் இணைக்கப்பட்டதைக் கேட்டுக் கொதிப்படைந்தனர்.
சிப்பாய்களின் உள்ளக் குமுறல் மங்கள் பாண்டே என்ற சிப்பாயின் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்களாகச் சீறி வெடித்து. மங்கள் பாண்டேயால் சுடப்பட்டு, படுகாயமடைந்த பிரிட்டிஷ் அதிகாரிகளைக் காப்பாற்றவோ, மங்கள் பாண்டேயைக் கைது செய்யவோ முடியாது என மற்ற சிப்பாய்கள் மறுத்தனர். ஆத்திரம் கொண்ட பிரிட்டிஷார் அந்தப் படைப்பிரிவையே கலைத்தனர். மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டான்.
இன்றைய அயோத்தியைத் தன்னகத்தே கொண்ட பைசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான் மங்கள் பாண்டே. மங்கள் பாண்டேயின் தியாகம் உ.பி. மாநிலம் முழுவதும் புரட்சித்தீயை மூட்டியது. கலைக்கப்பட்ட படைப்பிரிவிலிருந்து ஊர் திரும்பிய சிப்பாய்கள் மாநிலமெங்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்று குவித்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் உயிர்தப்ப ஓடி ஒளிந்தனர். அவத் மீண்டும் சுதந்திர சமஸ்தானமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
1857-இன் அந்த மாபெரும் எழுச்சியின் கதாநாயகர்கள் உலகிற்கு தெரியாத மிகச் சாதாரண மனிதர்கள். அவர்களது நாட்டுப் பற்றும், ராணுவத் திறமையும், வீரசாகசமும் இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயங்கள்!
ஹசரத் மஹல் : மாதருள் மாணிக்கம்
பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்ட வாஜித் அலிகானின் மனைவிதான் பைசாபாத்தில் நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புக் கிளர்ச்சியின் தலைவி. அவளது வரலாறு அபூர்வமானது.
பெரும் கொந்தளிப்பை அவத் சமஸ்தானம் சந்திக்கத் தொடங்கியிருந்த காலத்தில் அவள் ஒரு ஒன்றுமறியா நாட்டுப்புறப் பெண். இரண்டு வேளைச் சோற்றுக்குக் கூட வழியில்லாத குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண் மன்னனுடைய கையாட்களின் கண்களில் சிக்கினாள். அழகும், செல்வமும் மன்னர்களின் உடைமையன்றோ! பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டி பெற்றோரை மயக்கி சம்மதிக்க வைத்து, மன்னனின் ஆசைநாயகியாக்க அவளை அழைத்துச் சென்றனர் காவலர்கள்.
மன்னனின் ஆசை நாயகியாகிவிடுவது ஒன்றும் அன்றைக்கு சாதாரண விசயமல்ல; முதலில் அந்தப் புரத்தில் பணிப்பெண்ணாகச் சேர வேண்டும்; பிறகு மன்னன் விரும்பினால் நடனப் பெண்ணாகலாம்; அதன் பின் ஆசைநாயகியாக (பேகம்), பிறகு மஹல் (அரசி) பட்டம். எல்லாம் மன்னனின் விருப்பத்தைப் பொருத்தது.
இந்த நாட்டுப்புறப் பெண் இப்படி ‘பதவி உயர்வு’ பெற்று மேலேறிக் கொண்டிருந்தபோது ஆட்சியோ மெல்லக் கவிழ்ந்து கொண்டிருந்தது. அவள் அரசியாகி ஒரு ஆண் மகவையும் பெற்றெடுத்தாள்.
1856-இல் மன்னன் வாஜித் அலிஷா பட்டத்தை இழந்தான். கல்கத்தாவில் சிறைவைக்கப்பட்டான். தலைநகர் லக்னோவில் இருந்த பிரிட்டிஷ் கமிஷனர் சர் ஹென்றி லாரன்ஸ் கைக்கு அதிகாரம் மாறியது. நாடே கொந்தளித்தது. ஆங்காங்கே பிரிட்டிஷாரைக் கொன்று குவித்தவாறே சிப்பாய்கள் தலைநகரம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயப் பெண்களையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக ஒரு கோட்டைக்குள் இருத்திவிட்டு சிப்பாய்களை லக்னோவின் எல்லையிலேயே முறியடிக்கப் புறப்பட்டான் ஹென்றி லாரன்ஸ்.
ஆயிரமாயிரமாய் அலையலையாய் வந்து தாக்கிய இந்திய சிப்பாய்களிடம் படுதோல்வியுற்று கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் ஹென்றி லாரன்ஸ். வெற்றி பெற்ற சிப்பாய்களுக்கோ அடுத்து என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவர்களுக்கு ஒரு தலைவனில்லை. மன்னனோ கல்கத்தாவில் பிடிட்டிஷாரின் பிடியில். அவர்கள் பட்டத்தரசிகளை அணுகினார்கள். அவர்களது பிள்ளைகளில் யாரையேனும் மன்னனாக அறிவிக்குமாறு மன்றாடினார்கள். இந்த ‘அதிர்ஷ்டத்தின்’ பயங்கரத்தை எண்ணி நடுங்கிய அரசிகள் மறுத்தனர். பிரிட்டிஷாரிடம் சரண்டைந்துவிட அறிவுரை கூறினர்.
தூக்குமேடையாகவும் சிம்மாசனமாகவும் தோற்றம் தந்த அந்த பொறுப்பை ஏற்க ஹசாத் மகல் – அந்த நாட்டுப்புறத்துப் பெண் – முன்வந்தாள். தன் 10 வயது மகனை மன்னனாக்கித் தானே காப்பாளராகப் பெறுப்பேற்றுக் கொண்டாள்.
“இந்த பேகம் பெரும் ஆற்றலையும், திறமையையும் காட்டுகிறாள்; பிரிட்டிஷாருக்கு எதிராக சாகும்வரை போராட்டம் என அறிவிக்கிறாள்; பிரிட்டிஷ் அரசு என்ன செய்யப் போகிறது? இவர்களைக் கலகக் கும்பலாகக் கருதப் போகிறதா, மரியாதைக்குரிய எதிரிகளாக நடத்தப் போகிறதா?” என்று ஹசரத் மஹலின் திறமையை வியந்து எழுதினார் அன்றைய பிரிட்டிஷ் டைம் பத்திரிக்கையின் போர்முனைச் செய்தியாளர் ரஸ்ஸல்.
புரட்சி அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் புரட்சிக்காரர்களையே நியமித்தாள் ஹசாத் மஹல். பிரிட்டிஷார் ஒளிந்திருந்த கோட்டையை 3 மாதங்கள் தொடர்ச்சியாகத் தாக்கினாள். அவத் சமஸ்தானம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரிட்டிஷ் எதிர்ப்பு கிளர்ச்சியை மக்களிடம் தூண்டிவிட்டாள்.
அவத் சமஸ்தானத்தின் சில பகுதிகளைத் தருவதாக பேரம் பேசி நேபாள மன்னன் ராணா ஜங் பகதூரை பிரிட்டிஷார் விலை பேசினர். அதைவிடக் கூடுதலான பகுதிகளைத் தானே தருவதாகவும் அந்நியனுக்கு விலைபோக வேண்டாமென்றும் கூறி அந்த ஒப்பந்தத்தை பேகம் முறியடித்தாள். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த இந்தியப் படை வீரர்களையும், தளபதிகளையுமே ரகசியமாகச் சந்தித்தாள் ஹஸ்ரத் மஹல்.
“உங்களுடைய சகோதரர்களை நீங்கள் கொல்லக் கூடாது. எங்கள் மீது வெற்றுத் தோட்டாக்களைச் சுடுங்கள். வெடி மருந்துகளை வெள்ளையனைக் கொல்வதற்கு ஒதுக்கி வையுங்கள்” என்று நேரடியாகப் போர்முனைகளுக்குச் சென்று பார்வையிட்டாள்.
ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் படைகளை ஒன்றுதிரட்டி பிரிட்டிஷார் நடத்திய தாக்குதலை புரட்சி அரசாங்கம் தாக்குப் பிடிக்க இயலவில்லை. 10 மாதங்கள் மட்டுமே அது நீடித்தது. தோல்வியடைந்த போதும் ஹசரத் பிரிட்டிஷாரிடம் சிக்கவில்லை. புரட்சியில் முன்னணி வகித்த 16,000 வீரர்களுடன் லக்னோவிலிருந்து தப்பிச் சென்று பவுண்டி கோட்டையில் முகாமிட்டு அங்கிருந்து பிரிட்டிஷாரை தொடர்ந்து தாக்கினாள்.
இதற்கிடையில் விக்டோரியா மகாராணியின் பொது மன்னிப்பின் கீழ் சமரசம் பேச பிரிட்டிஷார் ஹசரத்தை அழைத்தனர்; ஹசரத் ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் வதந்தியைப் பரப்பினர். இதை வன்மையாக மறுத்தும் போராட்டத்தைத் தொடருமாறும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தாள் ஹசரத். பவுண்டி கோட்டையையும் பிரிட்டிஷார் கைப்பற்றினர்; ஹசரத் தலைமறைவானாள்.
தனக்கு நெருக்கமான சிறிய அளவு போர் வீரர்களுடன் உணவும், போதிய ஆயுதமுமின்றி இமயமலை அடிவாரத்திலுள்ள தெராய் காடுகளில் நாடோடியைப்போல அலைந்து திரிந்தாள். பின்னர் தன் மகனுடன் சாதாரண குடிமக்களாக நேபாளத்தில் வாழ்ந்து 1874-இல் காலமானாள்.
மதகுருவா, புரட்சிக்காரனா?
நல்ல உயரம், கட்டான உடல், நீண்ட நாசி, ஊடுறுவும் கண்கள், தோள்களில் பரவும் நீண்ட கருமுடி, மார்பில் புரளும் தாடி. சுருங்கக் கூறின் ஒரு முஸ்லீம் பக்கீரின் தோற்றம் – அவருக்கு பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் மோதல் எதுவும் கிடையாது; ஆனால் இறுதி மூச்சுள்ளவரை அவர் பிரிட்டிஷாரை எதிர்த்தார். அவரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு என அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.
அவருக்குப் பல பெயர்கள் – அமானுல்லா ஷா, அகமத் அலி ஷா, சிக்கந்தர் ஷா… ஆனால், வரலாற்று ஆவணங்கள் அவரை பைசாபாத் மௌல்வி என்றே சுருக்கமாக அழைக்கின்றன. பெயரைப் போலவே அவரது பூர்வீகமும் குழப்பமானது. சென்னை ராஜதானியிலுள்ள ஆற்காடு தான் அவர் சொந்த ஊர் என்கிறது ஒரு ஆவணம்; திப்பு சுல்தானின் சொந்தக் காரர் என்று சொல்கிறது இன்னொரு ஆவணம்; இல்லை அவர் வடமேற்கிந்தியாவின் மூல்தானைச் சேர்ந்தவர் என்றும் ஒரு ஊகம். இதில் முடிவு எதுவும் கிடையாது.
எப்படியோ இருக்கட்டும்; அவரது சொந்த ஊர் பைசாபாத் அல்ல. அவர் எதற்காக அங்கே வந்தார்? அயோத்தி அருகில் உள்ள அனுமான கார்ஹி எனுமிடத்தில் இந்துமத வெறியர்களால் கொலை செய்யப்பட்ட ஒரு மவுல்வியின் மரணத்துக்குப் பழிவாங்கத் தான் வந்தார் என்கிறது ஒரு பிரிட்டிஷ் ஆவணம்.
பைசாபாத்தில் நுழைவதற்கு முன்னரே, அதாவது 1857-க்கு முன்னரே அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்கள், முஸ்லீம்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டிருந்தார் என்கிறது இன்னொரு ஆவணம்.
மௌல்வியை ஒரு மதவெறியனாகச் சித்தரிக்கும் முதலில் குறிப்பிட்ட பிரிட்டிஷ் ஆவணம் பொய்யானது என்று சம்பவங்கள் சாட்சி பகிர்கின்றன.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகத்தைத் தூண்டியதற்காக பைசாபாத் மாவட்டக் கலெக்டரால் சிறைவைக்கப்பட்டார் மவுல்வி. பிரிட்டிஷாருக்கு எதிராகச் சிப்பாய்களின் எழுச்சி தொடங்கிப் பரவிய போது, சிப்பாய்கள் பைசாபாத் சிறையைத் தகர்த்தனர்; மவுல்வி உள்ளிட்ட அனைத்துக் கைதிகளையும் விடுவித்தனர். மவுல்வியே தங்கள் தலைவர் என அறிவித்தனர். மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சிப்பாய்கள் மத்தியில் மவுல்விக்கு இருந்த செல்வாக்கிற்கு இதுவே நல்ல சான்று.
வெற்றி பெற்ற சிப்பாய்கள் தோற்றவர்களைத் துன்புறுத்துவதும் கொள்ளையடிப்பதுமே பண்பாடாக இருந்த ஒரு காலத்தில், அதற்குத் தடை விதித்தார் மொவுல்வி. சிறையிலிருந்து வெளியே வந்தவுடனே லக்னோ நகரில் புரட்சி சிப்பாய்களைக் கொண்ட காவல் நிலையங்களை தோற்றுவித்தார். மக்களிடையே மவுல்விக்குப் பெருகிவரும் செல்வாக்கைக் கண்டு பேகம் ஹஸ்ரத் மகாலின் அமைச்சர்களுக்கே அச்சம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஒரு மோதலும் நடந்தது. இம்முரண்பாட்டைத் தவிர்க்க மவுல்வி தனது இருப்பிடத்தைப் புறநகர் பகுதிக்கு மாற்றிக் கொண்டார். பிரிட்டிஷாரிடமிருந்து லக்னோ நகரைக் காக்கும் போரில், மவுல்வியின் துருப்புக்களும் பேகத்தின் துருப்புக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டனர். 1857 நவம்பர் முதல் 1858 பிப்ரவரி வரை சுமார் 3 மாத காலம் லக்னோ நகரின் எல்லையிலேயே பிரிட்டிஷ் துருப்புகளைத் தடுத்து நிறுத்தியது மவுல்வியின் படை.
லக்னோவை பிரிட்டிஷார் கைப்பற்றியவுடன் புரட்சிக்காரர்கள் அனைவருமே நகரிலிருந்து தப்பிவிட்டனர். ஆனால் மவுல்வி மட்டும் அங்கேயே தலைமறைவாக இருந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். லக்னோவின் வீழ்ச்சிக்குப் பின் மவுல்வி வாழ்ந்தது மூன்றே மாதங்கள் தானெனினும், அக்குறுகிய காலதில் தனது ராணுவத் திறமையால் பிரிட்டிஷாரை அவர் கதிகலங்கச் செய்தார்.
லக்னோவிலிருந்தபடியே இரண்டே மாதங்களில் நகருக்கு 25 கி.மீ தொலைவில் உள்ள பாரி என்னும் கிராமத்தைத் தனது ராணுவத் தளமாக மாற்றினார் மவுல்வி. 3000 சிப்பாய்களுடனும் 18 பீரங்கிகளுடனும் அந்தத் தளத்தைத் தாக்கினான் பிரிட்டிஷ் தளபதி ஹோப் கிராண்ட். பிரிட்டிஷ் படைகளுக்குப் போக்குக் காட்டியவாறே பின்வாங்கி ரோகில்கண்ட் பகுதிக்குள் நுழைந்தது மவுல்வியின் படை.
ரோகில்கண்ட் பகுதியின் முக்கிய நகரமான பரேலி புரட்சிக்காரர்கள் வசம் இருந்தது. அதை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் படையை திசைதிருப்பும் முகமாக அவர்களைத் தாக்கத் தொடங்கினார் மவுல்வி. தில்ஹொர் எனும் நகரில் மவுல்வியிடம் அடிவாங்கிய பிரிட்டிஷ் படை பெரும் இழப்புகளுடன் தப்பியது. பரேலியின் மீது பிரிட்டிஷார் கவனம் செலுத்த விடாமல் அடுத்ததாக ஷாஜகான் பூரைத் தாக்கி கோட்டையைக் கைப்பற்றியது மவுல்வியின் படை. எனவே ஷாஜஹான் பூரை மீட்க தனது படையில் ஒரு பகுதியை பிரிட்டிஷார் அனுப்ப வேண்டியதாயிற்று. ஷாஜகான்பூரை பிரிட்டிஷார் கைபூற்றியவுடன் மவுல்வியின் படை சந்தீ, பவாயான் நகரங்களை நோக்கி நகர்ந்தது.
பவாயான் சமஸ்தானத்தின் மன்னன் ஜகர்நாத்சிங் பிரிட்டிஷாரின் கூட்டாளி. பவாயானை மவுல்வி தாக்கக்கூடும் என்பதை பிரிட்டிஷார் ஏற்கனவே மன்னனுக்குத் தெரிவித்திருந்தனர். மவுவ்வியை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க எப்படியாவது முயலுமாறும் கோரியிருந்தனர்.
இந்தச் சதியை அறியாத மவுல்வி, பவாயான் மன்னனை புரட்சிக்கு ஆதரவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்; 5000 பேர் கொண்ட தனது குதிரைப் படையையும், காலாட்படை மற்றும் பீரங்கிப் படைகளையும் தொலைவில் நிறுத்தி விட்டு சிறிதளவு வீரர்களுடன் கோட்டை நோக்கி நடந்தார்.
மன்னனின் தம்பி பல்தேவ் சிங், கோட்டை வாயிலில் மவுல்வியை ‘வரவேற்றான்’. பிரிட்டிஷாரால் வரிவசூலுக்காக நியமிக்கப்பட்ட தாசில்தார், தாலுக்தார் பதவிகளை ஒழிக்கும்படியும் சுயாட்சி பிரகடனம் செய்யும்படியும் கோரினார் மவுல்வி. கோரிக்கையை பல்தேவ் சிங் மறுத்தான். சொல்லி வைத்தாற் போல கோட்டை மதிலின் மேலிருந்து பாய்ந்த தோட்டாக்கள் மவுல்வியைத் துளைத்தன.
மவுல்வியின் தலையைத் துண்டித்து ஷாஜகான்பூர் கலெக்டரிடம் சமர்ப்பித்து 50,000 ரூபாய் சன்மானம் வாங்கிக் கொண்டான் ராஜா ஜகர்நாத் சிங். மவுல்வியின் தலை ஷாஜகான்பூர் கலெக்டர் அலுவலக வாயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தன் இறுதி மூச்சுள்ளவரை எதிரியைக் கலங்கச் செய்த தாய்த்திரு நாட்டின் வீரப் புதல்வன், எதிரியின் வாளால் மடியாமல் சொந்த நாட்டின் துரோகிகளால் கொல்லப்பட்டதல்லவோ பெரும் துயரம்! தனது வீரத்தால் இறவாப் புகழ் பெற்ற மவுல்வி இறக்கும் போது அவரது வயது 40.
ரோஹில் கண்டின் கிழச்சிங்கம்
இன்றைய உத்தரப்பிரதேசத்தின் பரேலி, மொராதாபாத் ஷாஜகான்பூர், பதுவான், பிஜ்னோர் மாவட்டங்கள் அடங்கிய பகுதிக்கு அன்று ரோகில் கண்ட் என்று பெயர். 1957 மே 10-ம் தேதி மீரட்டில் சிப்பாய்களின் எழுச்சி தோன்றிய மூன்றே வாரங்களில் ரோகில்கண்ட் சுதந்திரப் பிரகடனம் செய்தது. சுமார் 11 மாதங்கள் நீடித்திருந்த இந்த சுதந்திர அரசாங்கத்தின் தலைநகர் பரேலி; தலைமை தாங்கி பிரிட்டிஷாருடன் யுத்தம் நடத்தியவர் சுமார் 80 வயது நிரம்பிய கான் பகதூர் கான்.
மன்னர் குலத்தைச் சேர்ந்த கான் பகதூர்கான் அதிகாரத்திற்கு வந்தவுடன் செய்த முதல் பணி ஆத்திரத்தில் திசை தெரியாமல் கலகம் செய்து கொண்டிருந்த சிப்பாய்களை ஒழுங்கு படுத்தியதுதான். ஒழுங்கு படுத்தப்பட்ட சிப்பாய்களில் ஒரு பகுதியினர் முதல் சுதந்திரப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த டில்லி சக்ரவர்த்தி பகதூர் ஷாவுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டனர். உள்நாட்டில் பிரிட்டிஷ் வரிவிதிப்பு முறைகள் ரத்து செய்யப்பட்டு புதிய வரிவிதிப்பு முறை அறிவிக்கப்பட்டது.
அடுத்து இந்து – முஸ்லீம் ஒற்றுமையில் கவனம் செலுத்தினார் கான் பகதூர் கான். தாகூர் சாதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்கள் முகலாய ஆட்சியைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்; கான் பகதூரின் அரசுக்கு வரி கட்ட மறுத்தனர். சோபாராம் என்ற இந்துக்கள் இருவரை அமைச்சர்களாகவும் கான் பகதூர் நியமித்த பின்னரும் இந்நிலைமை தொடர்ந்தது. நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு இந்துக்களைத் தூண்டிவிட பிரிட்டிஷார் ஆயிரக்கணக்கில் செலவிட்டனர்.
இந்து – முஸ்லீம் ஒற்றுமையைச் சாதிக்க கான் பகதூர் எதையும் செய்யத்தயாராக இருந்தார். அவரது கீழ்க்கண்ட பிரகடனம் மத நல்லிணக்கத்தின் வரலாற்றில் குறிப்பிடதக்கதொரு சான்று.
“இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகிய அனைவரின் உயிருக்கும், உடைமைக்கும், மத நம்பிக்கைகளுக்கும் ஐரோப்பியர்கள் எதிரிகள். எனவே தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இருதரப்பினரும் முயலவேண்டும். இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்துவிட்டால் கைப்பிடியளவேயுள்ள ஐரோப்பியர்களை ஒழித்துக்கட்டுவது வெகு சுலபம். முஸ்லீம்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; ஆனால் இந்துக்கள் இதில் அலட்சியமாக உள்ளனர்.
இசுலாமியர்கள் பசு மாமிசம் பயன்படுத்துவது (பசுக்களைக் கொல்வது) இந்து மத நம்பிக்கைக்கு முரணாக இருப்பது தான் இந்துக்கள் பங்கேற்காததற்கு காரணம் எனத் தோன்றுகிறது. பசுமாமிசம் உண்ண வேண்டுமென்பது அல்லாவின் ஆணை அல்ல என்பதால் இசுலாமியர்கள் இப்பழக்கத்தைக் கைவிடுவதில் தவறில்லை. பசுக்களைப் பாதுகாப்பதை கருணை மிக்க செயலாக இந்துக்கள் கருதுவதால், அவர்கள் ஐரோப்பியர்களுக்கெதிரான போரில் ஈடுபடும் பட்சத்தில், அவர்களது நாட்டுப்பற்றை, பாராட்டி, எனது சமஸ்தானம் முழுவதும் பசுவதையைத் தடை செய்வேன்.
இப்போதைக்கு கசாப்பு வெட்டும் கூடங்கள் தவிர, இந்துக்கள் வசிக்கும் எந்த நகரத்திலும் முஸ்லீம்கள் – தங்கள் குடியிருப்புகளில் கூட – பசுக்களைக் கொல்லக் கூடாது என ஆணையிடப்படுகிறது… இதை மீறுபவர்களுக்கு 6 மாத சிறையும் அபராதமும் விதிக்கப்படும். எனினும் பசுவதையை முற்றிலுமாகத் தடை செய்வது ஐரோப்பியர்களை இந்தியாவிலிருந்து விரட்டுவதுடன் இணைந்த விசயம். இந்தப் போராட்டத்தில் பங்கு பெற இந்துக்கள் யாரேனும் தவறுவார்களேயானால் பசுவதையினால் நேரும் பாவத்திற்கு அவர்களே பொறுப்பாவார்கள்…”
மத மாச்சரியங்களைக் கடந்து வெகுவிரைவிலேயே கான் பகதூர் தனது தலைமையை நிலை நாட்டிக் கொண்டார். ராஜதந்திரத்தில் மட்டுமல்ல, இராணுவப் போர்த்தந்திரங்களிலும் தனது தலைமையை நிரூபித்தார் கான் பகதூர். இழந்த பகுதிகளைப் பிடிக்க பிரிட்டிஷார் உடனே போர் தொடுப்பார்கள் என்பதையும், பிரிட்டிஷாரைக் காட்டிலும் புரட்சி சிப்பாய்களின் ஆயுத வலிமை குறைவு என்பதையும் அவர் சரியாகவே கணித்திருந்தார். எனவே கொரில்லா யுத்த முறையையே பிரதானப் போர் முறையாகக் கையாண்டார்.
லக்னோவை பிரிட்டிஷார் கைப்பற்றி விட்டால் தன்னை எளிதில் வீழ்த்தி விட முடியும் என்பதைக் கான் பகதூர் அறிந்தே இருந்தார். எதிர்பார்த்தது போலவே லக்னோ வீழ்ந்தது; ஆனால் கான் பகதூர் சரணடைவதாக இல்லை. பரேலி மீது பிரிட்டிஷார் மும்முனைத் தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தடையாக வந்து மோதின புரட்சி சிப்பாய்களின் கொரில்லாப் படைகள்.
பரேலியை நெருங்குவதற்கே பிரிட்டிஷ் படைகளுக்கு ஒரு மாதம் பிடித்தது. மே 5-ம் தேதி பரேலி மூர்க்கமானதொரு போர்க்களமானது. கான் பகதூரின் படைக்குத் துணையாக தோற்கடிக்கப்பட்ட பேகம் ஹசரத் மஹலின் படைகள், மவுல்வியின் படைகள், மன்னன் ஃபெரோஸ் ஷாவின் படைகள் மற்றும் ரோகில் கண்டின் போர்ப்பரம்பரையினரான காஜிகள் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
போர்க்களத்தை நேரில் கண்டவரும், மயிரிழையில் அங்கிருந்து உயிர் தப்பியவருமான ‘பிரிட்டிஷ் டைம்’ பத்திரிக்கை நிருபர் ரஸ்ஸல் தனது அனுபவத்தைக் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்.
“திடீரென்று எங்கும் ஒரே கூச்சல், குழப்பம்; நான் அமர்ந்திருந்த பல்லக்கு திடீரென கீழே போடப்பட்டது. எனது பல்லக்குத் தூக்கிகள் பேயறைந்த முகத்துடன் அலறிக் கொண்டே ஓடினர். மனிதர்களும் மிருகங்களும் முட்டிமோதித் தடுமாறின; யானைகள் பிளிறிக் கொண்டே வயல்களில் இறங்கின; ஒட்டகங்கள் தலைதெறிக்க ஓட தொடங்கின; குதிரைகள், பெண்கள், சிறுவர்கள் – எல்லாம் அலையலையாகச் சாலையை நோக்கிப் பாய்ந்தன.
ஐயோ, கடவுளே… நான் காண்பது என்ன! சில நூறு கஜங்கள் முன்னே எங்களை நோக்கிக் காற்றைப் போல, பெரும் அலையைப் போல எழும்பி வரும் நூற்றுக்கணக்கான வெள்ளுடை தரித்த வீரர்கள், வெயிலில் மின்னும் அவர்களது வாட்கள், கர்ச்சிக்கும் அவர்களது குரல், இடியென முழங்கும் குதிரைகளின் குளம்போசை… காற்றும் வானமும் நடுங்கின.
அவர்கள் முன்னேற முன்னேற எங்களது படையினரின் மண்டையோடுகள் நொறுங்கின, வயல்வெளிகளில் ரத்தம் பெருகி ஓடியது. அந்தக் கணத்தில் எனது கண்கள் பார்த்ததைச் சொல்ல நாவெழும்ப வில்லை; ஒரு மணிநேரத்தில் கூட அந்த ஒரு கணத்தை என்னால் விவரித்து எழுத முடியாது! எனக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றுதான் – இதோ மரணம், அவமானகரமான மரணம், பரிதாபமான மரணம்!”
கான் பகதூரின் ‘காஜி’ படைவீரர்களுடைய தாக்குதல் அது. மாபெரும் போர்கள், அளப்பரிய தியாகங்களுக்குப் பின்னரும் நவீனமான, வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் ராணுவத்தை கான் பகதூரால் வெல்ல இயலவில்லை. பரேலி வீழ்ந்தது. கான் பகதூர் தனது சிப்பாய்களுடன் தப்பிச் சென்றார் ஏறத்தழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டிஷ் கைக்கூலியாய் மாறிய நேபாள இந்து மன்னன் ஜங் பகதூர், எண்பது வயதான பழுத்து முதிர்ந்த அந்த விடுதலைப் போராளியைப் பிடித்து வெள்ளையனின் கையில் ஒப்படைத்தான்.
கான் பகதூர் பரேலிக்குக் கொண்டு வரப்பட்டார்; ‘விசாரணை’ நடந்தது. மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சிக்கெதிராகக் கலகம் செய்த குற்றத்திற்காக, கான் பகதூர் தூக்கிலிடப்பட்டார்.