நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
பெfமென் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.
முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?
சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த படங்கள், துனிசிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. விளைவோ, கொலை மிரட்டல் முதற்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கொண்டார்.
இதனை பயன்படுத்திக்கொண்ட பெfமன் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரமில்லை (??), அவர்கள் நினைத்ததை செய்யும் உரிமை இல்லை (!!) என்று கூறி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதியை "அரை நிர்வாண ஜிஹாத் நாள் (Topless Jihad Day)" என்று குறிப்பிட்டு, இந்த தேதியில், முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் விதமாக (???!!!), உலகின் பல்வேறு பகுதிகளில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்தது.
இவர்களின் போராட்டமே விரும்பத்தகாத வகையில் தான் இருக்கின்றது என்றாலும் இதனைத் தாண்டிய நடவடிக்கைகளிலும் பெfமன் அமைப்பினர் ஈடுபட்டனர். அதாவது, பிரெஞ்சு தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளிவாசலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையை விளக்கும் "இறைவன் ஒருவனே, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் (லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலல்லாஹ்)" என்ற வாசகத்தை தாங்கிய பேனரை தீயிட்டு கொளுத்தினர்.
பேனரை எரிக்கும் பெfமன் அமைப்பினர்.
நிச்சயம் இவர்களுடைய நடவடிக்கைகள் பெண்ணுரிமையை மீட்டெடுக்கும் செயல்களல்ல, மாறாக ஒரு மார்க்கத்தின் மீதான வெறுப்புணர்வு மட்டுமே. இதனை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தவும் செய்தன. இஸ்லாமொபோபியாவால் பெfமன் அமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டின.
இப்படியான சூழலில் தான் பெfமனுக்கு எதிரான தீவிர பதிலடியை கொடுக்க ஆயத்தமாயினர் முஸ்லிம் பெண்கள். பதிலடி என்றால் சும்மா இல்லை, அது ஒரு அதிரடியான திட்டம். பெfமனை வெலவெலுத்து போகச்செய்யும் திட்டம்.
அப்படி என்ன திட்டம் என்று பார்ப்பதற்கு முன், இந்த திட்டத்திற்கு பின்னால் இருந்த சகோதரியை பார்த்து விடுவோம். இவருடைய பெயர் சோபிfயா அஹ்மத். பிரிட்டனின் பெர்மிங்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இவர். "அரைநிர்வாண ஜிஹாத் நாள்" என்று அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தினால் கண்ணியமான முறையில் போராட நாம் ஒரு நாளை ஏற்படுத்துவோம். அதற்கு பெயர் "பெருமைமிகு முஸ்லிம் பெண்கள் (Muslimah Pride Day) தினம்".
இந்த திட்டத்தின்படி, தாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக்கொள்ளும் முஸ்லிம் பெண்கள், அதற்கேற்றப்படி வாசகங்களை அமைத்து தங்கள் புகைப்படத்துடனோ அல்லது இல்லாமலோ, muslimahpride@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பினால், இந்த நிகழ்வுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகப்பக்க பக்கத்தில் அந்த செய்தியை பதிவேற்றி விடுவார்கள் (அந்த பக்கத்தை <<இங்கே>> காணலாம். போராட்டம் குறித்த தகவல்களை <<இங்கே>> பெறலாம்).
இதுபோல, ட்விட்டரிலும் #MuslimahPride மற்றும் #Femen என்ற ஹாஷ்டேக்குடன் தங்கள் செய்திகளை அனுப்புமாறு முஸ்லிம் பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இப்படியாக அறிவிக்கப்பட்டது தான் தாமதம், இந்த முயற்சிக்கு அளப்பரிய ஆதரவை அள்ளி வழங்கிவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். "பெfமனுக்கு எதிரான முஸ்லிம் பெண்களின் போராட்டம்" என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடங்கி நம்மூர் ஜீ நியூஸ் வரை இந்த செய்தியை பெரிய அளவில் பேசின.
இந்த போராட்டத்திற்கு வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு..
எங்களின் குரலை பெfமென் திருடிக் கொண்டது.
சுதந்திரத்தின் உண்மையான பொருளை இஸ்லாமை தழுவியதிலிருந்து உணர்ந்துக் கொண்டேன்.
நிர்வாணம் என்னை விடுவிக்காது. மேலும், நான் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் இல்லை.
எனது அறிவாற்றலைக் கொண்டு என்னை எடைப்போடுங்கள்
என் உரிமையை நிலைநாட்ட நீங்கள் தேவையில்லை
இவர் என்னுடைய சகோதரி. ஹிஜாப் அணிவது அவருக்கான சுதந்திரம்.
எனக்கு சுதந்திரமளித்தது இஸ்லாம்.
என் உடலை மறைக்க எனக்குள்ள சுதந்திரத்தை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் என்னை அடிமைப்படுத்துகின்றீர்கள் என்றே பொருள்.
நான் அடிமைப்படுத்தப்படுவதாக உங்களுக்கு தெரிந்தால் அதற்காக வருந்துகின்றேன். அதே நேரம், என்னை மன்னித்து விடுங்கள், ஏனென்றால், அப்படியாக அடிமைப்பட்டு இருப்பதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.
நிர்வாணம் சுந்தந்திரமில்லை. உங்களின் ஒழுக்கத் தத்துவம் எங்களுக்கு தேவையுமில்லை.
சுதந்திரம் என்பது உடல் சார்ந்ததல்ல, அது உள்ளம் சார்ந்தது. நாங்கள் முஸ்லிம்கள், இஸ்லாமை விரும்புபவர்கள்.
நீங்கள் என்னை விடுவிக்க தேவையில்லை. நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.
சுதந்திரமானவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க முடியாது.
இதுமட்டுமல்லாமல், பெfமன் அமைப்புக்கு முஸ்லிம் பெண்கள் எழுதிய வெளிப்படையான கடிதம் அவர்கள் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. பெண்களின் விடுதலை என்ற போர்வையில் காலனி ஆதிக்க இனவெறியை மட்டுமே பெfமன் வெளிப்படுத்துவதாக சாடியுள்ள அந்த கடிதம், நாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக் கொள்வதாகவும் கூறியது (அந்த கடிதத்தை முழுமையாக <<இங்கே>> படிக்கலாம்). 'இஸ்லாமில் பெண்களின் நிலை' குறித்த வெளிப்படையான உரையாடலுக்கும் பெfமன் அமைப்பினரை அழைத்துள்ளனர் முஸ்லிம் பெண்கள்.
ஆனால் இந்த நிகழ்வுகளில் எனக்கு புரியாத விசயங்கள் இரண்டு. நிர்வாண போராட்டங்கள் எப்படி ஒருவருடைய இலக்கை அடைய வழிவகுக்கும்? முகம் சுளிக்க வைத்து இலக்கிலிருந்து தூரப்படுத்த மட்டுமே உதவும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், முஸ்லிம் பெண்களை விடுவிக்க செய்யும் போராட்டம் என்று கூறிவிட்டு, தங்களை எதிர்க்கும் பெண்களை குர்ஆனினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று தூற்றுவது எப்படி பெண்களை மதிப்பதாய் அல்லது அவர்களுக்கான உரிமையை வழங்குவதாய் மையும்?
முஸ்லிம் பெண்களின் அதிரடியான செயல்திட்டத்தால் பெfமன் அமைப்பின் கண்ணியமற்ற போராட்டங்கள் வீழ்த்தப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சகோதரிகளே, உங்களின் விவேகமான அணுகுமுறையால் நாங்கள் பெருமைக் கொள்கின்றோம். KEEP GOING....
இறைவனே எல்லாம் அறிந்தவன்...
Please Note:
இந்த நிகழ்வு இன்னும் முடிவடையவில்லை. தங்கள் செய்திகளை அனுப்ப விரும்பும் சகோதரிகள், மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
My sincere thanks to:
1. Sister Asma (for french and Italy translations)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக