‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
in காங்கிரஸ், சட்டங்கள் - தீர்ப்புகள், நச்சுப் பிரச்சாரம், பா.ஜ.க, பார்ப்பன இந்து மதம், புதிய ஜனநாயகம், போலீசு by வினவு, April 20, 2012 -
இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை.
முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான். எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.
ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்களில் பலர் அப்பாவி இஸ்லாமியர்கள். பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது துயரக் கதைதான் இது.
முகமது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை பத்து மாத காலத்தில், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சிறிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவற்றில் 5 குண்டுகள் ஓடும் பேருந்துகளில் வெடித்தன. 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 10 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; இவற்றில் 5 ஒரே நாளில் வெடித்தன. அதுவும் வெவ்வேறு இடங்களில். ஒரே நேரத்தில் தில்லியின் சதார் பஜார் பகுதியிலும், காசியாபாத் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன. இதுபோல அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. காசியாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஓடும் ரயிலில், அதுவும் வெவ்வேறு பெட்டிகளில் நடந்தது.
ஓராண்டு வரை தொடர்ச்சியாக நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தில்லி போலீசார் திணறினர். இந்தச் சூழலில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பகுதியிலிருந்த அமீர் ஒரு முறை பாகிஸ்தான் சென்று திரும்பியது போலீசின் கண்களை உறுத்தியது. உண்மையில் பாகிஸ்தானில் மணம் முடித்துள்ள தனது சகோதரி வீட்டுக்குத்தான் அமீர் சென்று வந்தார். அதுவும், மேற்கூறிய குண்டு வெடிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் அவர் அங்கே சென்றார். ஆனால் அமீர், பாகிஸ்தான் சென்று குண்டு வைக்கப் பயிற்சி எடுத்து வந்து இந்தியாவில் குண்டுவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.
1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமீர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை, பயங்கரவாதம், அரசுக்கு எதிராகப் போரிட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 20 குண்டுவெடிப்பு வழக்குகளில் அமீர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் அமீர், அவரது கூட்டாளி சகீலுடன் இணைந்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் 10 வழக்குகளில், விசாரணை துவங்கும் முன்னரே சகீல் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, 2009ஆம் ஆண்டு தாஸ்னா சிறைச்சாலையில் சகீல் பிணமாகத் தொங்கினார். அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் வி.கே.சிங் மீது சகீலைக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமீரின் வழக்கறிஞரான என்.டி.பன்சோலி கடந்த 35 ஆண்டுகளாகக் குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இது போன்றதொரு வழக்கைத் தனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை எனக் கூறும் அவர், ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக, எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அமீர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை. எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.
இத்தனை ஆண்டுகளையும் அவர் தனிமையில், இருட்டுச் சிறையில் கழித்துள்ளார். சிறைக்கொட்டடியே அவரது உலகமாக இருந்தது. ஆனால் சிறைச்சாலைக்கு வெளியிலிருந்த உலகம் 14 ஆண்டுகளில் வெகுவாக மாறிப் போயிருந்தது. அவர் பிறந்து வளர்ந்த தில்லி மாநகரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. அமீரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது தாய் மூளைக் கோளாறால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு, ஊமையாகியிருந்தார். இதுவும் சிறையிலிருந்த அமீருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமீரின் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள்தான் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
அமீரைப் போன்றே இன்னும் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் போலீசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கி பல அப்பாவிகள் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகால சிறைவாசத்தில் வெளியே எல்லாம் மாறிவிட, விடுதலையாகி வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
அமீர் மீதான 20 வழக்குகளும் சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல்கள் தான். இது போன்ற சிறிய குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளதுஎன்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான். ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.
வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக